திருச்சி: விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு கடும் கட்டுப்பாடுகள்…
ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க.வினர் வெளிநடப்பு..
திருச்சியில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் விநாயகர் சிலை அமைப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என்.காமினி ஐபிஎஸ் தலைமை வகித்து பேசியதாவது:-
விநாயகர் சதுர்த்தி விழா 18-ம் தேதியும், சிலை கரைப்பு மற்றும் ஊர்வலங்கள் 20 -ம் தேதியும் நடைபெற உள்ளது. மாநகர பகுதிகளில் அமைக்கப்படும் சிலைகள் மற்றும் ஊர்வலத்தில் கொண்டு செல்லப்படும் சிலைகள் 10 அடி உயரத்துக்குமேல் இருக்கக்கூடாது. அரசியல் மற்றும் சாதி தொடர்பான பதாகைகள் இடம்பெறக்கூடாது. விழா நடைபெறும் இடத்தில், காவல் துறை அனுமதியுடன் ஒலிபெருக்கிகள் காலை, மாலை ஆகிய நேரங்களில் 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிக்கவோ, முழக்கமிடவோ கூடாது, சிலைகளை மாட்டுவண்டி, மீன்பாடி வண்டி, 3 சக்கர வாகனங்களில் எடுத்து வரக்கூடாது. ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும். சிலை வைக்கப்படும் இடத்தின் உரிமையாளர் மற்றும் சம்மந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளிடம் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். விநாயகர் சிலை நிறுவுவதற்கும் மற்றும் கரைப்பதற்கும் தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறா வண்ணம் விழாக்குழுவினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இதேபோல, விநாயகர் ஊர்வலம் நடைபெறும் நாளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறின்றி ஊர்வலம் செல்லவும், அதன் வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது குறித்தும், விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.
நிகழ்வில், காவல் துணை ஆணையர்கள் அன்பு (வடக்கு), செல்வக்குமார்(தெற்கு), ரவிச்சந்திரன் (தலைமையிடம்) மற்றும் அனைத்து சரக காவல் உதவி ஆணையர்கள், அனைத்து காவல் நிலையங்களின் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர்கள், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். மேலும், இந்து முன்னணி மாவட்டத் தலைவர் சுரேஷ், கோட்டச் செயலாளர் போஜராஜன், பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
காவல்துறையினர், கடும் கட்டுப்பாடுகளால் அதிருப்தி அடைந்த பா.ஜ.க.வினர் மற்றும் இந்து முன்னணியினர் கூட்டத்தை விட்டு வெளியேறினர்.இதுகுறித்து பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் கூறுகையில்:-
விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினரால் நடத்தப்பட்டுள்ளது. அவற்றில் பங்கேற்க இந்து முன்னணி மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. காந்தி மார்க்கெட் பகுதியில் நடந்த கூட்டத்துக்கு கூட என்னை அழைக்கவில்லை. ஆனால் திடீரென செவ்வாய்க்கிழமை ( 12.09.2023 ) நடைபெற்ற கூட்டத்துக்கு மட்டும் பெயரளவில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனவே, காவல்துறை செயல்பாட்டில் அதிருப்தி ஏற்பட்டதால், நாங்கள் கூட்டத்தை விட்டு வெளியேறி விட்டோம். உச்ச நீதிமன்றம் உத்தரவின்பேரில், எங்களது மத வழிபாடு நெறிமுறைகளுடன் விநாயகர் சிலைகள் பிரிதிஷ்டை மற்றும் ஊர்வலம், சிலைக்கரைப்புகள் நடைபெறும். மற்றபடி பாதுகாப்பு அளிப்பது காவல்துறை கடமை என்றார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.