Rock Fort Times
Online News

தேசிய நெடுஞ்சாலையில் வளைந்து, நெளிந்தும், பல வாகனங்களை “ஓவர் டேக்” செய்தும் மோட்டார் சைக்கிள் ஓட்டிய மருத்துவ கல்லூரி மாணவர்களை எச்சரித்த திருச்சி எஸ்.பி. நாகரத்தினம்..!.( வீடியோ இணைப்பு)

இன்றைய காலகட்டத்தில் ” ரீல்ஸ்” மோகத்தில் இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களில் ஆபத்தான முறையில் சாகசம் செய்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விடுகின்றனர். சிலர் ரயில்களில் பயணிக்கும் போது ஆபத்தான முறையில் ரிலீஸ் எடுத்து வெளியிடுகின்றனர். அந்தநேரத்தில் சில விபரீத சம்பவங்களும் நிகழ்கின்றன. இதுபோன்ற ஆபத்தான காரியங்களில் யாரும் ஈடுபடக்கூடாது என தமிழ்நாடு காவல்துறையினர் மற்றும் ரயில்வே போலீசார் எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தியும் சிலர் திருந்திய பாடில்லை. அந்தவகையில் திருச்சி, நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து சென்னை நோக்கி வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் வளைந்து நெளிந்தும், பல வாகனங்களை” ஓவர் டேக்” செய்தும் செல்கின்றார். இதனால் அந்த சாலை வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள் அச்சத்தில் உறைந்தனர். ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளில் வாலிபர் சாகசம் செல்வதை பின்னால் காரில் சென்ற அவரது நண்பர்கள் இருவர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த பலரும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த வீடியோவை பார்த்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, அந்த மோட்டார் சைக்கிள் பதிவு எண் மூலம் விசாரித்தபோது சாகசத்தில் ஈடுபட்டவர்கள் சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அதன்பேரில் சமயபுரம் போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கார்த்திக் பாலமுருகன் ஆகியோர் சமயபுரம் சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்த போது அந்த வாலிபர்கள் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த மாணவர்களை பிடித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அழைத்துச் சென்றனர். சாகசத்தில் ஈடுபடுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அழைக்கப்பட்டனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்ட திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், இனிமேல் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அவர்களை அனுப்பி வைத்தார். மேலும், இதுபோன்று போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி நாகரத்தினம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்