திருச்சி, சமயபுரம் மாரியம்மனுக்கு நடைபெறும் ஐம் பெரும் உற்சவங்களில் பஞ்சப் பிரகாரம் என்பது வசந்த உற்சவமாகும். பஞ்ச பூதங்கள், ஐம்பெருந்தொழில், ஐம்பெருங்கலை, ஐம்பெரும் பீடம் (பிரம்மா, விஷ்ணு, ருத்ரா, மகேஸ்வர, சதாசிவம்) மற்றும் ஐம்பெரும் உயிர் அவத்தைகள் (பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு, முக்தி) இவற்றை விளக்கும் தத்துவமாக உள்ள இந்த பஞ்சப் பிரகார உற்சவம் மே.6 ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைபெறுகிறது. நவக்கிரகங்களையும், 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் இத்தலத்தில் தனது கட்டுப்பாட்டுக்குள் இயக்கும் அஷ்டபுஜங்களுடன் கூடிய நூதன ஆதி பீட சுயம்பு அம்மனுக்கு வசந்த உற்சவத்தின் நடுநாயகமாக பஞ்சப் பிரகார உற்சவம் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம்( மே 15) தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் வடதிருக்காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் திருமண மண்டபத்திலிருந்து யானை மீது தங்கக் குடங்கள் மற்றும் வெள்ளிக் குடங்கள் வைக்கப்பட்டு, மேளதாளம் முழங்க கடைவீதி வழியாக திருக்கோயிலை அடைந்தது. இதனையடுத்து, விநாயகர் மற்றும் உற்சவர் மாரியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவியம், பழ வகைகள் மற்றும் புனித நீரால் வேத பாராயணம், வேத மந்திரம் முழங்க அபிஷேகங்களும், பூஜைகளும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது. மேலும், ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்துடன் மாதுளம் பூமேனியாய் வேண்டியவருக்கு வேண்டிய வண்ணம் அருள் பாலித்து அதி உன்னத சுயம்பு சக்தியாய் விளங்கும் அம்மன் இரவு 12 மணிக்கு வெள்ளி விமானத்தில் வெண்ணிற உடை அணிந்து மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாரம் முதல் சுற்று, தங்க கொடிமரம் இரண்டாவது சுற்று, தங்க ரதம் வலம் வரும் பிரகாரம் மூன்றாவது சுற்று, தெற்கு ரதவீதியில் பாதியும், வடக்கு வீதியில் நான்காவது சுற்று, கீழரத வீதி, மேலரத வீதி, வடக்கு ரத வீதி என பஞ்சப் பிரகார உற்சவம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், அறங்காவலர் குழு தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் இணை ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.