திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் கொடியேற்ற நிகழ்ச்சி பாதுகாப்புக்கு வந்த போலீசாரை உள்ளே விடாமல் கோவில் ஊழியர்கள் அடாவடி- கடும் வாக்குவாதம்… (ஆடியோ இணைப்பு)
சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். தற்போது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 15-ம் தேதி சித்திரை தேர் திருவிழா நடைபெறுகிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று(06-04-2025) காலை கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பங்கேற்பதற்காக அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். மேலும், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இந்நிலையில் கொடியேற்ற நிகழ்ச்சி பாதுகாப்பு பணிக்காக சமயபுரம் காவல் ஆய்வாளர் வீரமணி தலைமையில் போலீசார் வந்திருந்தனர். அப்போது அவர்களை கோவில் ஊழியர்கள் உள்ளே விடாமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வைத்துள்ளனர். இதனால், பொறுமை இழந்த காவல் ஆய்வாளர் வீரமணி, கோவில் ஊழியர்களிடம் பாதுகாப்பிற்காக வந்த எங்களையே உள்ளே விடாமல் தடுக்கிறீர்கள், அப்போ… பக்தர்களின் நிலைமை என்னவாகும், கோவிலில் அராஜகம் செய்கிறீர்களா? இப்படி நீங்கள் செய்தீர்கள் என்றால் இனிமேல் நாங்கள் பாதுகாப்பு தர மாட்டோம் என்று கேட்டார். இதனால் போலீஸாருக்கும், கோவில் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கோவில் நிர்வாகத்தினர் போலீசாரை கோவிலுக்குள் செல்ல அனுமதித்தனர். அதன்பிறகு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக கோவிலில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு நிலவியது.
Comments are closed.