சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டு சித்திரை தேரோட்ட விழா பூச்சொரிதலுடன் கடந்த மார்ச் 09-03-2025 காலை தொடங்கியது. மும்மூர்த்திகளை நோக்கி மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், இத்தலத்தில் தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லா விதமான நோய்களும் நீங்கவும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்க அம்மன் 28 நாட்கள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பது சிறப்பம்சமாகும். வருடம்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை அம்மன் விரதம் இருப்பார்.இந்த 28 நாட்களும் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர், பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. பூச்சொரிதல் விழாவையொட்டி 9 ம் தேதி அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாஜனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் உள்ளிட்ட பூஜைகள் முடிந்து மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுகளுடன் தொடங்கி முதல் பூச்சொரிதல் விழா சமயபுரம் கோவில் நிர்வாகம் சார்பில் ஆரம்பமானது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மனின் திரு உருவ சிலை மற்றும் படத்தை வைத்து மலர் தட்டுகளை எடுத்து வந்து மாரியம்மனுக்கு சாற்றி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு இன்று(06-04-2025) காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியின் முன்னதாக காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் கொடிமரத்தின் முன் எழுந்தருளினார். அதனைதொடர்ந்து காலை 8-10 மணியளவில் சமயபுரம் மாரியம்மன் திருஉருவ படம் வரையப்பட்ட கொடி, கோயில் குருக்கள் வேதங்கள் முழங்க ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி தேரோட்ட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு அம்மன் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், மரகுதிரை மற்றும் வெள்ளிகுதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா செல்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் ஏப்ரல் 15 ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர், 16 ம் தேதி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும், 17 ம் தேதி முத்துப்பல் லக்கிலும் புறப்பாடாகிறார். 18 ம் தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி நிறைவாக தேரோட்டம் முடிந்து 8-ம் நாளான 22-ந்தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார். இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன், கோவில் இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் அறங்காவலர்கள் பிச்சைமணி, சுகந்தி, லட்சுமணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Comments are closed.