Rock Fort Times
Online News

திருச்சி: வியாபாரியிடம் ரூ.37 லட்சம் பறிப்பு…

சி.சி.டி.விகள் இயங்காததால் மர்ம நபர்களை கண்டறிவதில் சிரமம்...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் 50 க்கும் மேற்பட்ட மொத்த வியாபாரம் செய்யும் மளிகை கடைகள் இயங்கி வருகிறது. இந்தக் கடைகளில் நாள் ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் வரவு,செலவு செய்யப்படுகிறது. முதல் நாள் நடைபெறும் வியாபாரத்தில் வரும் பணத்தை மறுநாள் காலை அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கணக்கில் செலுத்துவது வழக்கம். இதேபோல, நேற்று காலை காந்தி மார்க்கெட்டில் 50 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் பிரபல மளிகை கடையில் வியாபாரம் செய்த ரூ.37.5 லட்சம் பணத்தை மளிகை கடையில் கணக்காளராக பணிபுரியும் மன்னார்புரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் ( வயது 55) என்பவர் திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் செலுத்துவதற்காக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

திருச்சியின் மையப்பகுதியான தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள சிக்னல் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் ஆட்டோவை வழிமறித்து கிருஷ்ணகுமாரை கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பணப்பையை பறித்தனர்.இதனை தடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரான பாலக்கரை பகுதியை சேர்ந்த ஷாஜகான்  கையில் கத்தியால் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என். காமினி ஐபிஎஸ் , கிருஷ்ணகுமாரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். கிருஷ்ணகுமாரிடம் பணம் இருப்பது மர்ம நபர்களுக்கு எப்படி தெரியும்?, கடையில் வேலை பார்க்கும் யாரேனும் தகவல் கொடுத்தார்களா?, ஆட்டோ ஓட்டுனர் இதற்கு உடந்தையா ? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் 6க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் காவல்துறையினரால் பொருத்தப்பட்டிருந்தும் அவை இயங்கவில்லை. இதனால் மர்ம நபர்களை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதி கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டு மர்ம நபர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்