திருச்சி, புத்தூர் குழுமாயி அம்மன்கோவில் திருவிழா:- பக்தர்கள் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான ஆடுகளின் ரத்தத்தை உறிஞ்சி குடித்த மருளாளி…!
திருச்சி, வண்ணாரப்பேட்டை ஆறுகண் மதகு பகுதியில் குழுமாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு புத்தூர் மந்தைத்திடலில் பதிவுக் கோயில் உள்ளது. புத்தூர் மக்கள் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் குழுமாயி அம்மனுக்கு 5 நாள் விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.
முதல் நிகழ்ச்சியாக அன்று இரவு 8 மணிக்கு புத்தூர் பகுதி மக்கள் மேள தாளத்துடன், யானை மீது மலர் மாலை எடுத்துக் கொண்டு குழுமாயி கோயிலுக்குச் சென்று நள்ளிரவு அம்மனை புத்தூர் மந்தைத் திடல் பதிவுக் கோயிலுக்கு அழைத்து வந்தனர். 2ம் நாள் நிகழ்ச் சியாக நேற்று குழுமாயி அம்மன் ஓலையால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதியுலா வந்தார். அப்போது பக்தர்கள் சுத்தபூஜை எனப்படும் மாவிளக்குடன் தேங்காய் பழம் வைத்து வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடித்தல் இன்று (மார்ச் 6) நடந்தது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு வேண்டிக் கொண்டவர்கள் ஆயிரக்கணக்கான ஆட்டுக்குட்டிகளுடன் வரிசையாக அணிவகுத்து நின்றனர். காலை 10 மணிக்கு புத்தூர் மந்தைத்திடலில் அறநிலையத்துறை சார்பில் முதல் ஆடு பலியிடப்பட்டு குட்டி குடித்தல் திருவிழா தொடங்கியது. அப்போது சப்பரத்தில் அம்மன் எதிரே நிற்க ஒவ்வொரு ஆட்டின் ரத்தத்தையும் கோவில் மருளாளி உறிஞ்சி குடித்தார்.
இதனைக் காண புத்தூர் மந்தை பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். பின்னர் அந்த ஆடுகளை பக்தர்கள் வெட்டி சமைத்து தங்களது உறவினர்களுக்கும், பக்தர்களுக்கும் உணவு வழங்கினர். இதேபோல பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. நீர்மோர், பானகம் பழங்கள் போன்றவையும் வழங்கப்பட்டன.நாளை வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டும், மறுநாள் விடை யாற்றி உற்சவமும், அம்மன் கோயிலில் குடிபுகும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. மாநகர காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ADVERTISEMENT…👇
Comments are closed.