புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் இன்று குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் இன்று குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த 22-ந் தேதி கோவிலில் காப்பு கட்டப்பட்டு, கடந்த 6-ந் தேதி இரவு மறுகாப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு காளியாவட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை 2 மணிக்கு புத்தூர் மந்தைக்கு அம்மனை பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர் 5 மணி அளவில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு சுத்தபூஜை நடைபெற்று , அம்மன் ஓலைபிடாரி அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி, தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. குட்டிக்குடித்தலின் போது பக்தர்கள் வீடுகள் தோறும் தேங்காய், பழம், பூ சாற்றி வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி இன்று வெகு விமா்சையாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது .ஆயிரக்கணக்கான ஆடுகள் பலி கொடுக்கப்பட்டு ,ஆடுகளின் ரத்தத்தை மருளாளி குடித்தார். இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்ததால் நூற்றுக்கணக்கான காவல்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.