Rock Fort Times
Online News

திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் தனித்தனி அறைகளில் பூட்டி “சீல்” வைப்பு- துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு…!

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகின்றன.முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று நடந்து முடிந்தன.
திருச்சி தொகுதிக்கு உள்பட்ட ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் மற்றும் வி.வி.பேட் எந்திரங்கள் அந்தந்த கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு ஆயுதம் ஏந்திய துணை ராணுவப்படையினர் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி கொண்டு வரப்பட்டன.

 

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் திருச்சி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பேட் எந்திரங்கள் அனைத்தும் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு. மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிகளிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரும் பணிகள் நீடித்தன. கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகளிலிருந்து வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வந்து சேர்க்கும் பணிகள் நள்ளிரவையும் தாண்டி விடிய, விடிய நடைபெற்றன. 6 சட்டப்பேரவை தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்களும் முழுமையாக வந்து சேர்ந்த பிறகு அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. அதன்பின்னர் மொத்தமாக அனைத்து அறைகளையும் உள்ளடக்கிய வாக்குப்பதிவு எண்ணும் மையமும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அங்கு 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜமால் முகமது கல்லூரி வளாகம் துணை ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்