Rock Fort Times
Online News

திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை மே 9-ந் தேதி முதல்வர் மு. க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்…* அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் என இரு பேருந்து நிலையங்கள் இருந்தாலும் போக்குவரத்து நெருக்கடி தீர்ந்தபாடில்லை. இதனை கருத்தில் கொண்டு திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக
ரூ.900 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்துமிடம், தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம், லாரிகள் முனையம், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம், அஞ்சல் நிலையம் மற்றும் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் சர்வதேச அளவில் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இந்த புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பயன்பாட்டிற்கு வரும்போது 2 லட்சம் பயணிகளை கையாள முடியும். இந்த பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளன. இந்நிலையில் இன்று(05-04-2025) நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் வே.சரவணன், மாநகர காவல் ஆணையர் காமினி, திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, நகரப் பொறியாளர் சிவபாதம், மாநகராட்சி மண்டல குழு தலைவர் துர்கா தேவி, மத்திய மாவட்ட திமுக துணைச் செயலாளர் முத்துச்செல்வம், முன்னாள் மத்திய மாவட்ட திமுக துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், மாநகராட்சி கவுன்சிலர் காஜாமலை விஜய் மற்றும் கிராப்பட்டி செல்வம், மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

பின்னர், அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சியில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் முடியும் தருவாயில் உள்ளது. எஞ்சிய பணிகளும் முடிக்கப்பட்டு புதிய பேருந்து நிலையத்தை மே 9 -ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்கிறார். இதற்காக, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகில் பிரம்மாண்ட விழா நடக்கிறது. மே 8 -ந் தேதி மதியம் திருச்சி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்றைய தினம் மாலை கட்சியினரை சந்திக்கிறார். மறுநாள் 9 -ந் தேதி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை திறந்து வைப்பதோடு அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய மார்க்கெட்டுக்கு அடிக்கல் நாட்டுகிறார். விழாவில், 50 ஆயிரம் பேருக்கு பட்டா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். புதிய காவேரி பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு முன்பு டிசம்பர் மாத இறுதியில் அதனை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நடிகர் விஜய் நேரடியாக திமுக மீது குற்றச்சாட்டு வைக்கின்றாரே என்ற கேள்விக்கு.. ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் குற்றச்சாட்டுகளை வைக்கலாம். இதனை மக்கள் முடிவு செய்வார்கள் மக்களை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்