Rock Fort Times
Online News

திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் ஜூலை 16ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் – அமைச்சர் கே.என். நேரு…!

“ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரையை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பஞ்சப்பூரில் கட்டப்பட்டு மே 9ம் தேதி முதலமைச்சரால் திறக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம் ஜூலை 16ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் பேருந்து முனையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து முனையம் செயல்பாட்டிற்கு வரும் சில நாட்களில் அனைத்து கடைகளும் இயங்கும். சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் வழக்கம்போல் செயல்பாட்டில் இருக்கும். தற்போதைக்கு தனியார் பேருந்துகள் விருப்பப்பட்டால் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் வரலாம். மக்கள் முழுமையாக பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் போது தனியார் பேருந்துகளும் அங்கு வந்து விடுவார்கள். அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகள் தனியாக பிரித்து அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது திமுக அரசு தான். நிச்சயம் அந்த திட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.  மக்களுக்கு ஒரு ரூபாய் கூட தராத எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் ஆயிரம் ரூபாய் தந்த பின்பு 1500 ரூபாய் தருவோம் என பேசுகிறார். உள்ளாட்சி அமைப்புகளை கலைக்க பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக பரவும் தகவலில் உண்மை இல்லை.நாங்கள் ஏற்படுத்திய அமைப்பை நாங்களே எப்படி கலைப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன், நிர்வாகிகள் முத்து செல்வம், கிராப்பட்டி செல்வம், காஜாமலை விஜய், குடமுருட்டி சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்