திருச்சி என்.எஸ்.பி. சாலையில் அகற்றப்பட்ட தரைக்கடை உரிமையாளர்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி போராட்டம்- ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு….!
திருச்சி, தெப்பக்குளம் மற்றும் என்.எஸ்.பி.சாலை, பெரியகடை வீதி, சின்ன கடைவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தரைக்கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடந்து வந்தது. இது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடைஞ்சலாக இருந்தது. மேலும் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் தெப்பக்குளத்தை எட்டிக் கூட பார்க்க முடியாத நிலை இருந்து வந்தது. ஆகவே, இந்த தரைக் கடைகளை அகற்ற வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. மேலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தெப்பக்குளம் மற்றும் என்எஸ்பி சாலை பகுதியில் உள்ள தரைக் கடைகளை அகற்றிவிட்டு அவர்களுக்கு மாற்று இடம் கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில், தெப்பக்குளம் மற்றும் என்.எஸ்.பி. சாலையில் உள்ள தரைக்கடைகள் அகற்றப்பட்டன. அவர்களுக்கு மாற்று இடம் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் என்.எஸ்.பி. சாலையில் தரை கடை வைத்திருந்த வியாபாரிகள் தங்களுக்கு யானைகட்டி மைதானத்தில் மாற்று இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று(நவ. 26) மலைக்கோட்டை அருகே பெரிய கடை வீதி பகுதியில் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த தரைக்கடை வியாபாரிகள் 200 க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மீது போலீசார் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். மேலும், அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். அப்பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments are closed.