திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் பகுதியில் பூட்டிய வீடு மற்றும் காலிமனையில் அரங்கேறும் சமூக விரோத செயல்கள் – அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?…!
திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டம், 38-வது வார்டு வேணுகோபால் நகர் முதல் தெரு பகுதியில் லிட்டில் பிளவர் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் பின்புறம் ஒரு வீடு நீண்ட காலமாக பூட்டியே கிடக்கிறது. மேலும், இந்த வீடு அருகே 2 காலி மனைகளும் இருக்கின்றன. இந்த காலி மனைகளில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகின்றன. இந்த வீடு மற்றும் காலி மனைகள் அருகே குடியிருப்புகள் உள்ளன. புதர் மண்டி கிடக்கும் காலி மனைகளில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அருகில் குடியிருப்பவர்கள் அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர். இதன் உரிமையாளர் வெளியூரில் வசித்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி தினமும் சமூக விரோத செயல்கள் அரங்கேறுகின்றன. அருகில் குடியிருக்கும் சமூக ஆர்வலர் ஒருவர் தானே முன்வந்து அந்த இடத்தை சுத்தப்படுத்திய போது ஏராளமான பீர் பாட்டில்களும், பிராந்தி பாட்டில்களும் குவிந்து கிடந்தன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தும் அவரிடம் இருந்து முறையான பதில் இல்லை.
இந்த இடத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலமாகவும் மற்றும் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திடம் கடிதம் வாயிலாக தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அண்மையில் பெய்த தொடர் மழையின் காரணமாக இந்த காலிமனை மற்றும் பூட்டிக் கிடக்கும் வீட்டின் முன்புறம் மீண்டும் செடி, கொடிகள் படர்ந்து வளர்ந்து உள்ளன. மழைநீர் தேங்கியுள்ள காலி மனைகள் மற்றும் புதர் மண்டி கிடக்கும் காலி மனைகளை மாநகராட்சி நிர்வாகம் முறைப்படுத்தி வருகிறது. ஆனால், இந்த காலி மனைகள் மற்றும் வீட்டின் முன்புறம் பகல் மற்றும் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் தங்கு தடையின்றி நடந்து வருகின்றன. இந்த காலி மனைகளை அதிகாரிகள் முறைப்படுத்தாதது ஏன் என்று தெரியவில்லை. சமூக விரோத செயல்கள் நடக்கும் போது கொலைகள் ஏற்பட்டால் இதற்கு யார் பொறுப்பேற்பது?. இதனால், அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்கள் மன நிம்மதி இன்றி தவித்து வருகின்றனர். இந்த வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, மேற்கண்ட இடத்தினை சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு சமூக விரோத செயல்கள் நடக்காதவாறு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.