பணிகள் நிறைவு பெற்றுவரும் அரிஸ்டோ பாலத்தை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த எட்டு ஆண்டுகளாக ராணுவத்திற்கு சொந்தமான இடம் கிடைக்காததால் பாலத்தின் பணிகள் நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர காரணமாக இருந்த மத்திய அரசின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவத்திற்கு சொந்தமான இடத்திற்கு மாற்று இடம் தந்த தமிழக முதல்வருக்கும், முயற்சி செய்த அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.பாலம் சுற்றுச் சுவர்களுக்கு வெள்ளை அடிக்கும் பணி, மின்விளக்கு பொருத்தும் பணி நடைபெற உள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் பாலம் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும். ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எனவே அந்த பேரணி நடத்துவதற்கு நீதிமன்றம் கொடுத்துள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் சரத்துகளை அடிப்படையாகக் கொண்டு பேரணி நடைபெறுவதற்கான அனுமதியை மாநில அரசு செய்யும். அதேபோல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில் செலவு செய்யப்பட்டது தொடர்பாக தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் கூறிய கருத்துகள் சரியானதாகதான் இருக்கும் என்று கூறினார். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அரசிற்கும், மாநில அரசுக்கும் ஆளுநர் பாலமாக இருக்க வேண்டும் தடுப்புச் சுவராக இருக்கக் கூடாது என்றார்.
