திருச்சி, காட்டூர் மாண்ட்போர்ட் (சீனியர்) பள்ளியின் 19-வது ஆண்டுவிழா 02-12-2004 (திங்கட்கிழமை) சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு மாண்ட்போர்ட் கபிரியேல் சபை திருச்சி மண்டல தலைவர் அருட்சகோதரர் டாக்டர் எம்.இருதயம் தலைமை தாங்கினார். அதனைத்தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கருத்து நிறைந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் துணை முதல்வரும், கணினி அறிவியல் துறையின் துறைத்தலைவருமான டாக்டர் ஜே.ஜி.பி. சத்தியசீலன் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற இருபால் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசுகையில், எதிர்கால இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்யும் மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் இன்றைய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் உள்ளது. வலிமையான புதிய பாரதத்தை வலுவான இந்த மாணவ சக்தியால் மட்டுமே கட்டமைக்க முடியும். பெருகிவரும் அறிவியல் கண்டுபிடிப்புகளை இன்றைய இளைய சமூகத்தினர், குறிப்பாக மாணவர்கள் அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். கைப்பேசியில் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொள்ளும் மாணவர்கள், தங்களின் இன்பத்துன்பங்களை தங்களுடைய பெற்றோரிடமும் பகிர்ந்துக் கொள்ளவேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, விழாவின் கௌரவ விருந்தினராக கலந்துக்கொண்ட திருச்சி, காவேரி மருத்துவனை மூளை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை துறையின் தலைவரான மருத்துவர் ஜோஸ் ஜஸ்பர் பேசுகையில், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கேற்ப உடல்நலம் ஆரோக்கியமாக இருந்தால்தான் நம்முடைய தேவைகளை சரிவர பூர்த்தி செய்து கொள்ள முடியும். நோய் வந்துவிட்டது என்று உறங்கினோம் என்றால் நோயும் நம்முடன் உறங்கும். நடந்தோம் என்றால் அது தம்முடன் நடந்துவரும். ஓடினோம் என்றால் நம்மைவிட்டு ஓடிவிடும். இயற்கை உணவுகளையும், இயற்கை சார்ந்த வாழ்க்கை முறைகளையும் பின்பற்றி வாழ்ந்தோம் என்றால் வயது பல கடந்து வாழமுடியும். ஒவ்வொரு மனிதர்களும் ஒழுக்கத்தையும், கல்வியையும் இருகண்களாகக் கொண்டு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி நீங்கள் அனைவரும் தினமும் புத்தகம் படிக்க நேரம் ஒதுக்க வேண்டும்.ஏனெனில் புத்தகம் தான் ஒரு மனிதனின் சிறந்த நண்பன் என்கிறார் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் என்று தனது உரையில் கூறினார்.
தலைமை உரையாற்றிய அருட்சகோதரர் டாக்டர் எம்.இருதயம், ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பாய் எனும் வார்த்தைகளுக்கேற்ப இல்லாதவர்களுக்கு உதவும் மனிதர்களுக்கு இறைவனால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மாணவச் செல்வங்கள் இப்பண்பினை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார். இறுதியாக பள்ளியின் முதல்வர் அருட்சகோதரர் ராபர்ட் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.
Comments are closed.