Rock Fort Times
Online News

50 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான வாகனங்களை சுமந்த திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலம் விடை பெற்றது – புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது, போக்குவரத்தில் மாற்றம்…!

திருச்சி ஜங்ஷன் அருகே குறுகிய அளவிலான ரயில்வே மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்தப் பாலத்தின் வழியாக புதுக்கோட்டை, கீரனூர், துப்பாக்கி தொழிற்சாலை, கேகே நகர், விராலிமலை, எடமலைப்பட்டிபுதூர், துவாக்குடி, விமான நிலையம் உட்பட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகளும், வாகனங்களும் சென்று வருகின்றன. அதேபோல ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களும் தினமும் அணிவகுத்து சென்று வருகின்றன.  இந்தப் பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதாலும், மிகவும் குறுகியதாக இருந்ததாலும் அதன் அருகிலேயே பல கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகின்றன.  பழைய பாலத்தின் வழியாகவும் வாகனங்கள் சென்று வந்தன.  இந்தநிலையில்  திருச்சி ஜங்ஷன் அருகேயுள்ள பழைய ரயில்வே பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம்  கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.138 கோடியில் புதிய பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜையும் நடைபெற்றது. முதல் கட்டமாக பாலத்தின் ஓரமாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.  அதனைத்தொடர்ந்து  நேற்று நள்ளிரவு 12 மணி முதல் பழைய பாலத்தின் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் அருகில் உள்ள பாலத்தின் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டன. இன்று(13-10-2024) காலை பழைய பாலத்தில் பணிகள் துவங்கின.  பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் தோண்டும் பணிகள்  நடைபெற்று வருகின்றன.

போக்குவரத்து மாற்றம்

பாலப்பணி காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  அதன்படி  சென்னை, தஞ்சாவூர், சேலம், புதுக்கோட்டை வழித்தடங்களிலிருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பேருந்துகள் (நகரப் பேருந்து நீங்கலாக) டிவிஎஸ் டோல்கேட்டிலிருந்து தலைமை தபால் நிலையம், கண்டோன்மென்ட், வெஸ்ட்ரி ரவுண்டானா, மாவட்ட ஆட்சியரகம், மிளகு பாறை வழியாக பேருந்து நிலையத்தை அடைய வேண்டும்.  எதிர் மார்க்கத்தில் குரு உணவகம், முத்தரையர் சிலை, டிவிஎஸ் டோல்கேட் வழியாகச் செல்ல வேண்டும்.  திண்டுக்கல் செல்லும் பேருந்துகள் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மிளகுபாறை, கோரிமேடு வழியாக பாலத்தின் கீழ் பகுதியைக் கடந்து இணைப்புச்சாலை வழியாக திண்டுக்கல் சாலையில் செல்ல வேண்டும். எதிர் மார்க்கத்தில் திண்டுக்கல்லில் இருந்து வரும் பேருந்துகள் பாலம் ஏறாமல், கோரிமேடு மிளகுபாறை வழியாக மத்திய பேருந்து நிலையத்தை அடைய வேண்டும்.

மதுரையிலிருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் வரும் பேருந்துகள் மற்றும் மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர் பகுதியிலிருந்து வரும் அனைத்து இலகு ரக வாகனங்கள் அரிஸ்டோ மேம்பாலம் வழியாகச் சென்று பாலத்தில் உள்ள ரவுண்டானா வழியாக ஜங்ஷன் மார்க்கமாக செல்லும் பாதையில் இறங்கி ஜங்ஷன், வழிவிடு முருகன் கோயில் வழியாகப் பேருந்து நிலையத்தை அடைய வேண்டும்.  எதிர் மார்க்கத்தில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை செல்லும் பேருந்துகள் மற்றும் மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர் செல்லும் இலகு ரக வாகனங்கள் மத்திய பேருந்து நிலையத்தின் பின்புறம் வஉசி சாலையில் சென்று காமராஜர் சிலை வழியாக அரிஸ்டோ மேம்பாலத்தில் ஏறி இறங்கி மன்னார்புரம் வழியாகச் செல்ல வேண்டும்.

சரக்கு மற்றும் கனரக வாகனங்கள்

சென்னை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம் பகுதிகளிலிருந்து திண்டுக்கல் மார்க்கமாகச் செல்லும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் மன்னார்புரம் வழியாக மதுரை சாலையில் சென்று மணிகண்டத்தில் வலதுபுறம் திரும்பி வண்ணாங்கோயிலை அடைந்து திண்டுக்கல் சாலையில் செல்ல வேண்டும். எதிர்மார்க்கத்தில் இதே பகுதிகளுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் இதே வழியில் சென்று மன்னார்புரத்தை அடைந்து, அங்கிருந்து செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்