Rock Fort Times
Online News

திருச்சி காந்தி மார்க்கெட் தற்போதுள்ள இடத்திலேயே தொடர்ந்து இயங்க வேண்டும் – * தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு அறிக்கை

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நூற்றாண்டு பெருமை கொண்ட திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி காந்தி மார்க்கெட்டை முழுமையாக அப்புறப்படுத்த முயற்சிகள் நடந்தன. முன்னதாக 2017ம் ஆண்டு கள்ளிக்குடியில் அமைக்கப்பட்ட புதிய மார்க்கெட்டிற்கு இடம் மாற்றம் செய்யவும் முயற்சிகள் நடந்தன. இவ் விரு முயற்சிகளில் இருந்தும் காந்தி மார்க்கெட்டைச் சேர்ந்த அனைத்து தரப்பு வியாபாரிகளின் நலனையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு காந்தி மார்க்கெட் தற்போது இயங்கும் இடத்திலேயே தொடர்ந்து இயங்குவதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முழு முயற்சி மேற்கொண்டது. இதனடிப்படையில் அப்போதைய தமிழக முதல்வர், அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்டோரை பலமுறை சந்தித்து வலியுறுத்தியும் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் காந்தி மார்க்கெட் இயங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மேற்கொண்ட ஆக்கபூர்வமான தொடர் முயற்சிகள் காரணமாக காந்தி மார்க்கெட் தற்போதுள்ள இடத்திலேயே தொடர்ந்து இயங்கும் என அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் சமயத்திலும், அதற்கு பின்னரும் காந்தி மார்க்கெட் தொடர்ந்து தற்போதுள்ள இடத்திலேயே இயங்கும் என தற்போதைய தமிழக அரசு சார்பிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் சமீப காலமாக காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் ஒரு சிலர் திருச்சி காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரிகளை கள்ளிக்குடி புதிய மார்க்கெட்டிற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என பகிரங்கமாக கோரிக்கை வைத்ததோடு, அதனை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு தரப்பிற்கு கோரிக்கை மனு அளித்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அறிகிறோம்.

கள்ளிக்குடி மார்க்கெட் திருச்சியிலிருந்து வெகுதூரத்தில் அமைந்துள்ளதோடு கடைகளின் அளவும் மிகச் சிறியதாக இருந்ததோடு, தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் மாடிகள் வைத்து கட்டப்பட்ட மார்க்கெட்டாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வணிகர்கள் அங்கு செல்ல மறுத்தனர். காந்தி மார்க்கெட்டை கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பிற்கு உடன்பாடு இல்லை.  தமிழக அரசு சார்பில் புதிதாக பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகில் 236 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மார்க்கெட் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பேரமைப்பு வரவேற்கிறது.  அதே நேரத்தில் திருச்சி மாநகர மக்கள் மற்றும் வெளியூர் விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர் எளிதாக வந்து செல்லக்கூடிய காந்தி மார்க்கெட்டை அப்புறப்படுத்த முயற்சிப்பதையோ, கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்வதையோ, பேரமைப்பு ஏற்காது. பேரமைப்பை பொறுத்தவரை திருச்சி காந்தி மார்க்கெட் தற்போதுள்ள நிலையில், அனைத்து வியாபாரிகளும் தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் பிரதான நோக்கமாகும். அவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும் திருச்சி காந்தி மார்க்கெட் தற்போதுள்ள இடத்திலேயே தொடர்ந்து செயல்படுவதற்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆக்கமும். ஊக்கமும், ஒத்துழைப்பும் வழங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்