Rock Fort Times
Online News

திருச்சி மாவட்ட எஸ்.பி நேரில் ஆஜராக உயர் நீதீமன்றம் உத்தரவு…

அரசின் திட்டத்தை சரியாக கண்காணிக்கவில்லை என மாவட்ட ஆட்சியருக்கும் 'குட்டு'

திருச்சியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில்., திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியத்திற்குட்பட்ட மருதூர் கிராமத்தில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் அதிகாரிகள் முறையாக விதிமுறைகளை பின்பற்றவில்லை எனவும், ஒரே குடும்பத்தை சேர்ந்த நீலகண்டன் மற்றும் தங்கப்பொண்ணு ஆகியோருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்துள்ளனர். நீலகண்டனின் வீட்டின் புகைப்படத்தை, தங்க பொண்ணு என்ற மற்றொரு பயனாளியின் முகவரிக்கு அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளனர். அந்த வீட்டின் முழு நிதியையும் அதிகாரிகள் முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர். மேலும் பயனாளி தங்க பொண்ணு அக்டோபர் 1920 அன்று இறந்துவிட்டார். ஆனால்
அதிகாரிகள் அவர் உயிரோடு இருப்பதைப் போன்று போலியான கட்டைவிரல் அடையாளத்துடன் அவருடைய ஒப்புதலை உருவாக்கி, இறந்தவர் ஜூலை 2022 அன்று யூனியன் அலுவலகத்திற்கு நேரில் வந்ததாக அதிகாரிகள் பதிவுகளில் காட்டியுள்ளனர். எனவே, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யவும், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இவ்வழக்கை ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் விசாரித்த நீதிபதிகள், தமிழக முதன்மைச் செயலாளரின் கடிதத்தின் அடிப்படையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் விசாரணை அலுவலர்களை நியமிக்க வேண்டும். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தில் கீழ் முறையீடு செய்த லால்குடி ஒன்றிய அலுவலர்கள் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வழக்கை முடித்து வைத்திருந்தார். நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது நீதிமன்ற அவதூறு வழக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ் சுப்பிரமணியம், விக்டோரியா கௌரி அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது அரசு தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் ஏழை எளிய மக்கள் பயன்பெறக்கூடிய திட்டம். இந்தத் திட்டத்தின் நோக்கம் முழுமையாக சிதைக்கப்பட்டுள்ளது. மக்களின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதை அனுமதிக்க முடியாது. ஏற்கனவே தொடர்புடைய அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் முறைகேடு குறித்து அறிக்கை அளித்த பின்பும் கூட, தொடர்புடைய அதிகாரிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யாமல் தாமதித்திருப்பது அவமதிப்பாகும். இந்தத் திட்டத்தை கண்காணிக்க வேண்டிய திருச்சி மாவட்ட ஆட்சியர் முறையாக கண்காணிக்கவில்லை.அதிகாரிகளும் மெத்தனப் போக்கில் இருந்துள்ளனர். சம்பந்தப்பட்ட பகுதியில் இந்த ஒரு வீட்டில் மட்டும் முறைகேடு நடந்துள்ளதா? அல்லது முழு திட்டத்திலும் முறைகேடு நடந்துள்ளதா? என நீதிமன்றத்திற்கு சந்தேகம் வருகிறது. காவல்துறை நடவடிக்கையில் சந்தேகம் எழுகிறது. கடைநிலை ஊழியரின் மேல் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, ஏன்? உயர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசின் ஒரு திட்டத்தில் முறைகேடு நடந்தால், உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை அதில் பங்கு இருக்கும். அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும். இது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இவ் வழக்கில் திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிடப்படுகிறது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கீழ் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். வழக்கை சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அவசர அவசரமாக கடை நிலை ஊழியர் மீது வழக்குப்பதிந்து வழக்கை முடிக்க நினைக்கிறார். இது கண்டனத்திற்குரியது. எனவே இந்த முறை கேட்டில் தொடர்புடைய ஒவ்வொரு அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்ற நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளதோடு வழக்கை வருகிற 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்