Rock Fort Times
Online News

காவல்நிலையத்தில் புகுந்து தாக்குதல்: திமுகவினர் 5பேருக்கு நிபந்தனைஜாமீன்

திருச்சி கண்டோன்மென்ட் ஸ்டேட் பேங்க் காலனியில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு திரும்பிய போது திமுக அமைச்சர் கே.என்.நேருவுக்கு, கடந்த, 15ம் தேதி திருச்சி சிவா எம்பி ஆதரவாளர்கள் கருப்புக் கொடி காட்டினர். அதையடுத்து, அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் சிவாவின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். மேலும், சிவாவின் ஆதரவாளர்கள் அழைத்துச் செல்லப்பட்ட திருச்சி செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்திற்குள் புகுந்து, திருச்சி எம்.பி .சிவா ஆதரவாளர்களை தாக்கினர். அதையடுத்து, திமுக நிர்வாகிகள் காஜாமலை விஜய், முத்துச்செல்வம், துரைராஜ், ராமதாஸ், திருப்பதி ஆகியோர் மீது, 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவுச் செய்து, அனைவரையும் கைது செய்தனர். திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண்-2ல் ஆஜர்படுத்தப்பட்ட அனைவரும் வரும், 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, ஐந்து பேரும் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஐந்துபோின்  சார்பில் மூத்த வழக்கறிஞர் ஓம்பிரகாஷ், ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தார். ஜாமீன் மனுக்களை விசாரித்த, 2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமார், ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வரும் இன்று (திங்கட்கிழமைக்கு- 27ம் தேதி) ஒத்தி வைத்தார். இன்று ஜாமீன் மனுக்களை விசாரித்த திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு, ஐந்து பேருக்கும்  ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நிபந்தனைகள் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகவில்லை.  அதையடுத்து, ஐவரும் நாளை திருச்சி மத்தியச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர். கடந்த, 20ம் தேதி மற்றும் 23ம் தேதி என இரண்டு முறை தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களை, திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண்-2 நீதிபதி பாலாஜி ஏற்கனவே தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்