திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (24). இவர் ஹோட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இன்று (12-01-2024) அவர் சஞ்சீவி நகர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சிமெண்ட் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் விக்னேஷ் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற அனைத்து வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தப்பட்டன. தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்களின் கோரிக்கையை துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் கல்லணை சாலையை இணைக்க கூடிய பகுதியில் சாலையை கடந்து செல்ல கூடிய வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆகவே, இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இன்னும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. ஆகவே, இனியும் விபத்துகள் ஏற்படா வண்ணம் , இப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.