திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் மேயர் மு.அன்பழகன் திடீர் ஆய்வு- நடைபாதையில் குப்பையை கொட்டிய வியாபாரிகளுக்கு அபராதம்…!
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் சுகாதார பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் இன்று(12-11-2024) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அங்குள்ள கழிவறைகளை பார்வையிட்டு தூய்மையாக பராமரிக்கவும், சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், நடைபாதைகளில் குப்பையை கொட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய கடை வியாபாரிகளுக்கு ரூ.2000 அபராதம் விதித்தார். தினந்தோறும் இளநிலை பொறியாளர் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரிகிறதா? என்று கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், நடைபாதையில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும், பேருந்து நிலையப் பகுதியை தூய்மையாக பராமரிக்கவும் அறிவுரை கூறினார். இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி ஆணையர் ஜெயபாரதி, உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.
Comments are closed.