மரணமடைந்த திருச்சி CBCID இன்ஸ்பெக்டர் கே.சிவாவின் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை !
- எம். நாகராஜன், சீனியர் சப் எடிட்டர்
திருச்சி மாவட்ட சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் கே.சிவா, திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, நேற்று மதியம் ( 10 / 4 / 2023 ) 2:30 மணி அளவில் காலமானார். தமிழக காவல்துறையில் 1999ம் ஆண்டு பேட்சை சேர்ந்த இன்ஸ்பெக்டர் கே.சிவாவின் மரணம் திருச்சி காவல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியது. காரணம் இன்ஸ்பெக்டர் கே.சிவா, எவ்வித ஏற்றதாழ்வுமின்றி அனைவரிடமும் யதார்த்தமாக நன்கு பழகும் இயல்பு கொண்டவராம். காசு, பணம், லஞ்சம், ஆடம்பரம் என எதற்கும் ஆசைப்படாதவராம். பணியில் இருந்தபோதே இறந்த, இன்ஸ்பெக்டர் கே.சிவாவின் பூத உடல், அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, மேல உரப்பனூர் கிராமத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கே.சிவாவின் பேட்சை சேர்ந்த ஏராளமான காவல் ஆய்வாளர்கள் தமிழகம் முழுவதிலுமிருந்து வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்த இன்ஸ்பெக்டர் கே.சிவாவின் நண்பர் ஒருவரிடம் பேசினோம்.,
” 1999ம் ஆண்டு தமிழக காவல்துறை எஸ்.ஐ பணிக்கு மொத்தம் 422 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் முதல்நிலை தேர்ச்சிப்பெற்ற 282 பேர் சட்டம் & ஒழுங்கு எஸ்ஐயாக பணியமர்த்தப்பட்டனர். அதில் 12வது ரேங்கில் தேர்வானவர்தான் இன்ஸ்பெக்டர் கே.சிவா.அந்தளவுக்கு திறமைசாலி. எப்பவுமே ஆக்டிவாகவே இருப்பார். உடன் பழகியவர்கள் யாரையும், எப்போதும் விட்டுக்கொடுக்கமாட்டார். எவரை பற்றியும் புறம் பேசமாட்டார். அப்பேற்ப்பட்ட நல்ல நண்பரை இழந்துவிட்டோம் ” என்றாா். இன்ஸ்பெக்டர் கே.சிவாவின் புகழுக்கு மேலும் பெருமைசேர்க்கும் விதமாக, தமிழ்நாடு அரசு சார்பில், துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது பூத உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மரணமடைந்த இன்ஸ்பெக்டர் கே.சிவாவுக்கு பரமேஸ்வரி என்கிற மனைவியும், பி.டெக் இரண்டாம் ஆண்டு பயிலும் சஞ்சய் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வருண்குமார் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் இன்ஸ்பெக்டர் கே.சிவாவின் மாமனார் பெரியசாமி, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஒன்றிய திமுக செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.