திருச்சி கேம்பியன் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலை பள்ளியில் பயின்ற பல மாணவ, மாணவிகள் அரசு உயர் பதவிகளிலும், வெளிநாடுகளிலும் உயர் பதவியில் இருக்கின்றனர். பலர் தொழில் அதிபர்களாகவும் உள்ளனர். இந்த பள்ளியைச் சேர்ந்த உடற்கல்வி இயக்குனர் ஜோ. ராஜேஷ் குமாருக்கு 2024-25-ம் ஆண்டிற்கான தமிழக கல்வித்துறையில் உயரிய விருதாகிய டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் கேம்பியன் பள்ளியில் ஆசிரியர் தினவிழா, புனித மாண்ஃபோர்ட் கபிரியேல் சபை மண்டலத் தலைவர் முதல் வருகை மற்றும் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா ஆகியவை கேம்பியன் பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்குப் பள்ளியின் முதல்வர் அருட்சகோதரர் ஜேம்ஸ் பால்ராஜ் தலைமை வகித்தார். புனித மாண்ஃபோர்ட் கபிரியேல் சபை மண்டலத் தலைவர் அருட்சகோதரர் ஜான் பிரிட்டோ முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர், திருச்சி மண்டலத் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பேசிய திருச்சி மண்டலத் தலைவர், மாணவர்கள் அனைவரும் தங்களுடைய கடமையினையும், பொறுப்பினையும் உணர்ந்து செயல்பட்டு பள்ளிக்கும், குடும்பத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என அறிவுறுத்தினார். விழாவில் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற உடற்கல்வி இயக்குநர் முனைவர் ஜோ. ராஜேஷ் குமாருக்கு பள்ளியின் முதல்வர் மற்றும் திருச்சி மண்டலத் தலைவர் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர். தொடர்ந்து பேசிய ராஜேஷ் குமார், இந்த விருதைப் பெறுவதற்கு துணையாக இருந்த பள்ளி முதல்வர், துணை முதல்வர், ஏனைய அருட்சகோதரர்களுக்கும், ஆசிரிய பெருமக்களுக்கும், மாணவர்களுக்கும் தன்னுடைய நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

Comments are closed.