திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்- பட்டமளிப்பு விழாவையும் புறக்கணிக்க போவதாக அறிவிப்பு…!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அலுவலக பணியில் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படுகிறது. நீதிமன்ற ஆணை, தமிழக அரசின் நிதி குழு ஒப்புதல், ஆட்சிமன்ற குழுவின் ஒப்புதல் பெற்று தான் அந்த ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழக அலுவலக பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை குறைக்கும் நோக்கில் நிதித்தணிக்கை துறை உதவி இயக்குனர் முபாரக் அலி மாநில உயர்மட்ட குழுவிற்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் ஓய்வுபெற்ற 33 பணியாளர்களுக்கு நிதித்தணிக்கை சான்றிதழ் வழங்காமல் உள்ளார். இதனால் அவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்காமல் உள்ளது. இதனை கண்டித்தும், உடனடியாக நிதித்தணிக்கை சான்றிதழ் வழங்க வலியுறுத்தியும், நிதித்தணிக்கை துறை உதவி இயக்குனரை மாற்ற வலியுறுத்தியும் பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளர் நலச்சங்கத்தினர் கடந்த வாரம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்று(21.10.2024) முதல் துணைவேந்தர் அலுவலகம் முன்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து துணை வேந்தர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என பல்கலைக்கழக பணியாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடக்க உள்ள பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கப்பதாகவும் அறிவித்துள்ளனர். பாரதிதாசனின் பல்கலைக்கழக பணியாளர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டமளிப்பு விழாவிற்கான ஆயத்த பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.


Comments are closed.