Rock Fort Times
Online News

திருச்சி: டாஸ்மாக் மேற்பார்வையாளரை அரிவாளால் வெட்டி பணம் பறிக்க முயற்சி…

காரில் தப்பிய 7 பேர் கும்பலுக்கு வலை வீச்சு...

திருச்சி மாவட்டம், துவாக்குடி காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழமாங்காவனம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையில் பாண்டியன் (வயது 47) என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு கடை மூடும் சமயத்தில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 7 பேர் கொண்ட கும்பல், கல்லாவில் உள்ள பணத்தை தருமாறு கேட்டு மிரட்டி அவரை வெட்டியுள்ளனர். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவிக்கு ஓடி வரவே அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் ஏறி தப்பி சென்று விட்டது. இதுகுறித்து திருநெடுங்குளம் பொதுமக்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் அவ்வழியே வந்த அந்த காரை வழிமறித்தனர். ஆனால், கார் அவர்களை மோதுவது போல் போக்கு காட்டி சென்றதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காரின் கண்ணாடியை உடைத்தனர். ஆயினும் கார் நிற்காமல் சென்று விட்டது.
காயமடைந்த பாண்டியன் சிகிச்சைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் தாக்குதலுக்கு உள்ளான பாண்டியன் தனது பாதுகாப்பிற்காக பெரிய அரிவாள் ஒன்றை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அவர் ஏன் அரிவாள் வைத்திருந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 7 பேர் கொண்ட மர்ம கும்பலுக்கும், பாண்டியனுக்கும் ஏற்கனவே விரோதம் இருந்ததா? என்று கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்