திருச்சி, அரியமங்கலத்தில் பழிக்கு பழியாக கொலை செய்ய திட்டம் தீட்டிய 2 ரவுடிகள் கைது- தப்பி ஓடிய பெண் ரவுடிக்கு வலை…!
திருச்சி, அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் திடீர் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர். உடனே போலீசார் தங்களது வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு அந்த வாலிபர்களை விரட்டி சென்றனர். அவர்களில் இரண்டு பேரை போலீசார் பிடித்தனர். பெண் ரவுடி உள்பட 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட 2 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள், அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 24), மேல அம்பிகா புரத்தை சேர்ந்த இளவரசன் (26), பாலசுப்ரமணி (39), கயல்விழி சேகர் (53) என்பதும், இவர்கள் நான்கு பேரும் ரவுடி பட்டியலில் உள்ளதும் தெரிய வந்தது. மேலும் ,கடந்த ஆண்டு பிரபல ரவுடி கேபிள் சேகரின் மகன் முத்துக்குமாரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் ஐந்துக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜாமினில் வெளியே வந்த அந்த நபர்களை கொலை செய்யும் நோக்கில் மேற்கண்ட 4 ரவுடிகளும் இணைந்து கொலை செய்ய திட்டம் தீட்டி கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து சரவணன், இளவரசன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய பாலசுப்பிரமணி மற்றும் கயல்விழி சேகர் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். கயல்விழி சேகர் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட கேபிள் சேகரின் மனைவியாவார். கைது செய்யப்பட்ட இளவரசன் கேபிள் சேகரின் இரண்டாவது மகன் ஆவார். கைதான நபர்களிடமிருந்து அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
Comments are closed.