திருச்சி, திருவெறும்பூர் அருகே துவாக்குடி மலை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட மாதிரி பள்ளியை அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இங்கு, ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் இருவருக்கும் தனித்தனியே ஹாஸ்டல் வசதி உள்ளது. இங்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் வேலூர் மாவட்டம், கொடியநத்தம், வசந்த நகர் எம்.குப்பம் பகுதியைச் சேர்ந்த பலராமன் மகன் யுவராஜ் (வயது 17) பிளஸ்-2 படித்து வந்தார். அவர் இன்று( ஜூலை 31) காலை விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன மாணவன் யுவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து மாணவன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.