திருட்டு குறித்து முறையாக விசாரணை நடத்தாத உப்பிலியபுரம் போலீசாரை கண்டித்து திருநங்கைகள் சாலை மறியல் போராட்டம்…!
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலையம் முன்பாக 20-க்கும் மேற்பட்ட திருநங்கை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உப்பிலியபுரம் பகுதியில் வசித்து வரும் பிரசாந்தினி என்ற திருநங்கை வீட்டில் ஒன்னேகால் சவரன் நகை மற்றும் வீடு கட்டுவதற்காக வைத்திருந்த ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் வீட்டின் பீரோவை உடைத்து திருடிவிட்டு வீட்டிற்கு தீ வைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து உப்பிலியபுரம் காவல் உதவி ஆய்வாளர் காயத்ரியிடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரில் மூன்று நபர்கள் மீது புகார் மனு அளித்தும் அதை விடுத்து ஒருவர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளனர். மீதமுள்ள இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தருமாறு கோரிக்கை வைத்து இன்று( ஜூலை 7) 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உப்பிலியபுரம் காவல் நிலையம் முன்பு துறையூர்- தம்மம்பட்டி மாநில நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் துறையூர் காவல் ஆய்வாளர் முத்தையன் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
Comments are closed.