பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பெண் காவலர்களுக்கு பயிற்சி…!- டி.ஜி.பி.சந்தீப் ராய் ரத்தூர் சான்றிதழ் வழங்கினார்…
சென்னை, ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் பயிற்சி தலைமையகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து இரண்டாம் கட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சி (தொகுதி 1) 14.07.2025 முதல் 16.07.2025 வரை 3 நாட்கள் தமிழ்நாடு காவல் பயிற்சி தலைமையகத்தின் கீழ் நடத்தப்பட்டது. இப்பயிற்சியானது, 15 பணியிடை பயிற்சி மையங்கள் மூலம் சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய காவல் ஆணையரகத்தை சேர்ந்த 93 பெண் காவலர் முதல், பெண் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரையிலா னவர்களுக்கு காவல் பயிற்சி தலைமையகத்தில் செயல்படும் ஒருங்கிணைக்கப்பட்ட பணியிடை பயிற்சி மையத்திலும் மற்றும் தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், சேலம், கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய 8 காவல் பயிற்சிப் பள்ளிகளில் 691 பெண் காவலர்களுக்கும் என மொத்தம் 784 பெண் காவலர்களுக்கு இப்பயிற்சியானது அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்டங்கள் மற்றும் அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள், அவர்களைக் கையாளும் முறைகள், புலனாய்வு நுட்பங்கள், வழக்கு ஆவணங்களை ஆவணப்படுத்துதல், போக்சோ மற்றும் சிறார் வழக்குகளில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றிய தெளிவு பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு, விழிப்புணர்வு, மறுவாழ்வு மற்றும் அரசு உதவி குறித்த பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டது. இப்பயிற்சியின் போது உடலையும், மனதையும் வலுப்படுத்தும் நோக்கில் யோகா பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. பயிற்சியின் இறுதி நாளன்று, பயிற்சி குறித்த விளக்க அமர்வு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழாவும் காவல் பயிற்சி தலைமையக காவல் துறை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தூர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அப்போது அவர் காவல் பயிற்சி தலைமையகத்திற்கான சிற்றேடு, வருடாந்திர பாட நாட்காட்டி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த பயிற்சி கையேடு, காவல் பயிற்சி கையேடு ஆகிய புத்தகங்களை வெளியிட்டு, பயிற்சி பெற்ற பெண் காவலர்கள் தமிழ்நாட்டிற்கும், தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
Comments are closed.