Rock Fort Times
Online News

பள்ளி வேன் மீது ரயில் மோதல்: பலியான 2 மாணவ, மாணவிகளின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ரயில்வே சார்பில் தலா ரூ.5 லட்சம் நிதி உதவி…!

கடலூரில், செம்மங்குப்பம் அருகே இன்று (ஜூலை 8) பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரெயில்வே கேட்டை அந்த வேன் கடந்து செல்ல முயன்ற போது அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் ஒரு மாணவன், ஒரு மாணவி என 2 பேர் உயிரிழந்தனர். வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் வருத்தம் அடைந்ததோடு நிவாரண நிதியும் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (8-7-2025) காலை நடந்த மோசமான ரெயில் விபத்தில் விலை மதிப்பில்லாத இரண்டு இளம் பிள்ளைகளின் உயிர் பறிபோன செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். வாழ வேண்டிய வயதில் உயிரிழந்த அந்தத் துளிர்களின் மரணம் என்னை ஆற்றொன்னாத் துயரில் ஆழ்த்துகிறது. விபத்தில் உயிரிழந்த செல்வன் நிமிலேஷ் (வயது 12), த/பெ விஜயசந்திரகுமார்) மற்றும் செல்வி சாருமதி (வயது 16), த/பெ .திராவிடமணி) ஆகிய இருவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நான்கு நபர்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளித்திடவும் அறிவுறுத்தியுள்ளேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். என தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தெற்கு ரெயில்வே சார்பிலும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்த குழந்தைகளுக்கு 2.50 லட்சம் ரூபாயும், காயமடைந்த குழந்தைகளுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்