நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற போது பெருந்துயரம்: மரத்தில் கார் மோதி 4 வாலிபர்கள் உயிரிழப்பு…!
கோவை மாவட்டம், செட்டிப்பாளையம் அடுத்த சிறுவாணி சாலையில் நேற்று இரவு அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இந்த விபத்தில் நண்பர்களான பிரகாஷ் (22), ஹரிஷ் (21), சபரி (21), அகத்தியன் (20) ஆகிய 4 வாலிபர்கள் உயிரிழந்தனர். பிரபாகரன் (19) என்ற வாலிபர் படுகாயமடைந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று படுகாயமடைந்த வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் நண்பர்களான 5 பேரும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்றபோது விபத்தில் சிக்கிக் கொண்டதும், அவர்கள் மதுபோதையில் காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் எனவும் தெரியவந்தது. உயிரிழந்தவர்கள் 2 பேர் தஞ்சாவூரை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் சிலர் கோவையில் உள்ள தனியார் கார் வாட்டர் வாஷ் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வாட்டர் வாஷ் செய்ய வந்த காரை எடுத்துக்கொண்டு பயணம் மேற்கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.