Rock Fort Times
Online News

தஞ்சை அருகே பெருந்துயரம்: கோவில் குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு…!

தஞ்சாவூர் மாவட்டம், திருவேங்கட உடையான்பட்டி கீழத்தெருவை சேர்ந்த செந்தில் மகன் பாலமுருகன்( வயது 10), கனகராஜ் மகன் மாதவன் (10), இருவரும் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தனர். ஸ்ரீதர் மகன் ஜஸ்வந்த்(8), மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். இதற்கிடையில், செல்லப்பன்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள சுந்தரமூர்த்தி அய்யனார்கோவில் மண்டலாபிஷேக விழாவில் கிராமமக்கள் கலந்து கொண்டனர். இதில், பாலமுருகன், மாதவன், ஜஸ்வந்த் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். பிறகு மண்டலாபிஷேகம் முடிந்து நேற்று( ஜூலை 11) இரவு 10 மணிக்கு வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால், பிள்ளைகள் வீட்டிற்கு வெகுநேரமாகியும் வரவில்லை. இதையடுத்து கிராம மக்களுடன் இணைந்து பல இடங்களில் அவர்களை தேடினர். மருதக்குடி பிள்ளையார் கோவில் குளத்தில் சிறுவர்கள் குளித்ததாக கேள்விப்பட்டு அங்கு சென்று பார்த்தனர். அப்போது, குளத்தின் கரையில், ஆடைகள் மற்றும் புத்தகப்பை, செருப்புகள் கிடந்தது. தொடர்ந்து கிராம மக்கள் சிலர் குளத்தில் இறங்கி தேடிய போது, சிறுவர்கள் பாலமுருகன், மாதவன், ஜஸ்வந்த் மூவரும் தண்ணீரில் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை கிராம மக்கள் மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் மூன்று சிறுவர்களும் அதிகளவில் தண்ணீரை குடித்த நிலையில், இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மூன்று சிறுவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பள்ளியில் இருந்து வந்த சிறுவர்கள் மூவரும், குளத்தில் ஆழம் அதிகம் இருப்பதை அறியாமல் இறங்கிய நிலையில், நீச்சல் தெரியாமல் மூழ்கி இறந்து இருக்கலாம் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்