லால்குடி அருகே துயர சம்பவம்: மரம் முறிந்து விழுந்ததில் கணவன்-மனைவி பலி! * இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ( வீடியோ இணைப்பு)
திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன். இவரது மகன் சுதர்சன்(37). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி புனிதா. இந்த தம்பதிக்கு 4 வயதில் தனிஷா என்ற பெண் குழந்தையும், பிறந்து 7 மாதமே ஆன மிதுன் ஜெய் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு லால்குடி பகுதியில் சுதர்சன் சொந்த வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று (மார்ச் 1) மாலை சுதர்சன்- புனிதா தம்பதி இருசக்கர வாகனத்தில் லால்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். திருச்சி மாவட்டம், மேலவாளாடி அருகே வந்தபோது சாலை ஓரத்தில் இருந்த நாவல் மரம் திடீரென உடைந்து சாலையில் தம்பதி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது விழுந்தது. இதில் அவர்கள் இருவரும் மரத்தின் அடியில் சிக்கினர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மரக்கிளைகளை அகற்றி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தம்பதி இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலன்இன்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையில் தம்பதி இருவரும் மீட்கப்பட்ட சிறிது நேரத்தில் மரத்தின் அடியில் சிக்கிய இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் இந்த விபத்தினால் திருச்சி- லால்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.