விராலிமலையில் கோவில் திருவிழாவுக்காக ஒலிபெருக்கி கட்டிய போது துயர சம்பவம்: மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி…!
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள அம்மன் கோவிலில் 7-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு கோவில் பகுதியை சுற்றி ஸ்பீக்கர்கள், ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டு வருகிறது. அந்தவகையில் விராலிமலை கடைவீதி அருகே உள்ள ஹைமாஸ் லைட் கம்பத்தில் ஏறி விராலிமலை அடுத்துள்ள சரளபட்டியைச் சேர்ந்த ரமேஷ்(22) என்ற தொழிலாளி ஒலிபெருக்கி கட்டிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கை அந்த வழியாக சென்ற மின் கம்பி மீது பட்டதாக கூறப்படுகிறது. இதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு அங்குள்ள கடை கூரையில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை சக தொழிலாளிகள் மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை போலீஸார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.