கேரள மாநிலத்தை சேர்ந்த மாரிமுத்து- ஸ்ரீஜா தம்பதியினர் தங்களது இரண்டு மகன்களுடன் மணப்பாறை அருகே உள்ள போடுவார்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தனர். அப்பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் நீராடுதல் நிகழ்வு நடைபெற்றது. இதில் கிராம மக்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில், மாரிமுத்து- ஸ்ரீஜா தம்பதிகளின் மகன்கள் சஞ்சய் (13), சஞ்சித் (8) ஆகிய இருவரும் இம்மானுவேல் (10), பாலாஜி (13) ஆகிய சிறுவர்களுடன் சேர்ந்து அப்பகுதி காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய் அருகே தேங்கி இருந்த குட்டை நீரில் பாட்டிலில் நீரை நிரப்பி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சஞ்சய், சஞ்சித், இம்மானுவேல் ஆகியோர் தேங்கியிருந்த நீரில் தவறி விழுந்தனர்.
உடனே, பொதுமக்கள் ஓடி வந்து சஞ்சித் மற்றும் இம்மானுவேலை காப்பாற்றிய நிலையில் சஞ்சய்யை காப்பாற்ற முடியவில்லை. நீண்ட நேரம் தேடிய நிலையில் சிறுவன் சஞ்சய் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய் வால்வு பகுதியில் சிக்கி கிடந்தான். உடனே, சிறுவனை மீட்ட ஊர் பொதுமக்கள் அவனை தூக்கிக் கொண்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Comments are closed.