திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூர் பகுதியில் உள்ள மாமரத்துப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பட்டாயி அம்மன், காமாட்சி அம்மன் கோவிலின் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த விழாவில், நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி கிராமம் காதம்பள்ளியைச் சேர்ந்த வெங்கடேசன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன், 5 வயது மகள் பைரவியையும் அழைத்து வந்திருந்தார். அப்போது, சிறுமி சாலையோரத்தில் இருந்தபோது, மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வாகனம் மோதி, பைரவி தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். திருமணமாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு பெற்ற ஒரே பெண் குழந்தை என்பதால், இந்த சம்பவம் குடும்பத்தாரை வேதனையில் ஆழ்த்தியது. விபத்து தொடர்பாக தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் காட்டுப்புத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.