திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை சுப்பிரமணியபுரத்தின் இருபுறமும் அதிக அளவில் தரைக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தரைக் கடைகள் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்ததால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. அந்த புகார்களின் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அந்த கடைகளை அப்புறப்படுத்தினர். இதனால், அதிர்ச்சி அடைந்த வியாபாரிகளும், திருச்சி மாவட்ட தரைக்கடை தள்ளுவண்டி சங்கத்தை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உரிய தீர்வு எட்டப்படாத காரணத்தினால் நாளை மாநகராட்சி அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் மற்றும் வியாபாரிகள் போராட்டம் காரணமாக சுப்பிரமணியபுரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed.