பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், மின்வாரியம் உட்பட மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள லட்சக்கணக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உட்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று( ஜூலை 9) நாடு தழுவிய அளவில் போராட்டம், பேரணி, மறியல் ஆகியவை நடைபெற்றன. தமிழகத்தில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தொழிற் சங்கங்களின் தேசம் காக்கும் போராட்டம் நடைபெற்றது. அதேபோல திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியில் அண்ணா சிலை முன்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாற்றுத் திறனாளிகள் அமைப்பு செயலாளர் ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். அகில இந்திய மாதர் சங்க செயலாளர் மல்லிகா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் வினோத், கட்டுமான சங்க நிர்வாகி கோவிந்தராஜ், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி குமார் ஆகியோர் முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் அண்ணா சிலையில் தொடங்கி கடைவீதி வழியாக சகாயமாதா பேருந்து நிலையத்தை அடைந்து திருச்சி-
சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகளை மறிக்க முற்பட்டனர். கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்து அருகில் உள்ள கருப்பண்ணசாமி திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். போராட்டத்தில் 45 பெண்கள் உட்பட 92 பேர் கலந்து கொண்டனர். மாலை அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Comments are closed.