தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் பிசுபிசுத்தது: திருச்சியில் வழக்கம்போல இயங்கிய பேருந்துகள்- ஆட்டோக்கள்…! (வீடியோ இணைப்பு)
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்த பட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று( ஜூலை 9) நாடு தழுவிய அளவிலான வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அதிமுக தொழிற்சங்க ஊழியர்கள் பங்கேற்கவில்லை. தமிழகம் முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் தமிழ்நாடு முழுவதும் வழக்கம்போல பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இயங்கின. திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களில் இருந்து வழக்கம் போல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கின. ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், டாக்ஸிகள் போன்றவையும் வழக்கம் போல இயங்கின. இதன் காரணமாக போக்குவரத்தில் எந்த பிரச்சனையும் எழவில்லை. திருச்சி மாவட்டத்தில் 430 நகர பேருந்துகளும், 490 புறநகர் பேருந்துகளும் இன்று காலை நிலவரப்படி இயக்கப்பட்டன. இயக்கப்படும் பேருந்துகளை தடுத்து நிறுத்தினால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு தமிழ்நாடு கும்பகோணம் போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
Comments are closed.