Rock Fort Times
Online News

சுங்க கட்டணம் பல மடங்கு உயர்வு:- துவாக்குடி சுங்கச்சாவடியில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போராட்டம்…!

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் அண்மையில் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை துவாக்குடி சாலையில் உள்ள சுங்கச்சாவடியை கடந்து செல்லும் தனியார் புறநகர் பேருந்துகள் மாதத்திற்கு ரூ.8, 700 ரீசார்ஜ் செய்ய வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், கட்டணத்தை சுங்கச்சாவடி நிர்வாகம் அதிரடியாக உயர்த்தி உள்ளது. அதாவது ரூ8,700 இல் இருந்து ரூ.10 ஆயிரத்து 190 ஆக உயர்த்தியதோடு அதுவும் 50 முறை சுங்கச்சாவடியை கடந்து சென்று வருவதற்கே இந்த கட்டணம் பொருந்தும் என கட்டுப்பாடு விதித்துள்ளது. திருச்சியில் இருந்து தஞ்சாவூர், காரைக்கால் வரை 18 தனியார் புறநகர் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த பேருந்து உரிமையாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு இந்த 50 நடை என்பது ஒரு வாரத்திற்குள் முடிந்து விடும் என்றும், அப்படி பார்க்க போனால் மாதத்திற்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சுங்க கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் இது தங்களுக்கு கட்டுப்படியாகாது. அதனால், பழைய படியே சுங்க கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று(30-04-2025) காலை திருச்சியில் இருந்து தஞ்சாவூர் சென்ற தனியார் பேருந்து துவாக்குடி சுங்கச்சாவடியை கடந்து செல்ல முயன்றபோது புதிய கட்டணப்படி ரீசார்ஜ் செய்யாததால் சுங்கச்சாவடி நிர்வாகத்தால். தடுத்து நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மற்ற தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களும் சுங்கச்சாவடியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் ஏ.எஸ்.பி அரவிந்த் பனாவத், துவாக்குடி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இருதரப்பினரையும் துவாக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து வரும் நிலையில் மற்ற காவலர்கள் போக்குவரத்தை சீரமைத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்