திருச்சி, காந்தி மார்க்கெட் பகுதியில் குடோனில் மூட்டை, மூட்டையாக ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்…* வட மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை தட்டி தூக்கியது காவல்துறை!
திருச்சி மாநகர காவல் ஆணையராக ந.காமினி ஐபிஎஸ் பொறுப்பேற்றதிலிருந்து குற்ற சம்பவங்களை தடுப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று (25.11.2025) காந்தி மார்க்கெட் எல்லைக்குட்பட்ட தஞ்சாவூர் ரோடு, கைலாயநாதர் ஆலயம் அருகில் சிலர் வாடகைக்கு வீடு எடுத்து அதனை குடோனாக பயன்படுத்தி, இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து, காந்திமார்க்கெட் காவல் சரக உதவி ஆணையர், காந்தி மார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த வெளி மாநிலத்தை சேர்ந்த 2 நபர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அஜித்குமார் (21), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் சர்மா(25) என்பது தெரியவந்தது. இவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து, அனீஸ் என்ற நபர் மூலம் குட்கா பொருட்களை கடத்தி வந்து, பதுக்கி வைத்து திருச்சியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவர்கள் 22 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் 240 கிலோ ஹான்ஸ், 20 கிலோ கூல்லிப், 8 கிலோ விமல் என மொத்தம் சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பிடிபட்ட இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர்களை அதிரடியாக பிடித்த காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசாரை மாநகர காவல் ஆணையர் காமினி ஐபிஎஸ் வெகுவாக பாராட்டினார். மேலும் திருச்சி மாநகரத்தில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களான கஞ்சா, குட்கா பொருள்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடரும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

Comments are closed.