திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, பச்சைப்பெருமாள் பட்டி வடக்கு கிராமத்தில் பிரபு (வயது 42) என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம், வைரபெருமாள்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் அணுகி, தனது தாயார் கடந்த 07.12.2025 அன்று இறந்து விட்டதாகவும், தனக்கு வாரிசு சான்றிதழ் தருமாறும் கேட்டுள்ளார். அதற்கு பிரபு, வாரிசு சான்று வழங்க பரிந்துரை செய்ய ரூ.5000 லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத புகார்தாரர், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். அவர்கள் சொன்ன அறிவுரையின் பேரில், ரசாயனம் தடவிய பணத்தை விஏஓ பிரபுவிடம் கூலி தொழிலாளி கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் பாய்ந்து சென்று பிரபுவை பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments are closed.