கார் மீது மோதல்: இழப்பீடு தராமல் கள்ளச்சாவி போட்டு எடுத்துச் செல்லப்பட்ட டிப்பர் லாரி விரட்டி பிடிப்பு…!
சிதம்பரத்திலிருந்து மணல் ஏற்றிய டிப்பர் லாரி ஒன்று திருச்சி வழியாக கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை ஈரோட்டை சேர்ந்த அறிவழகன் என்பவர் ஓட்டினார். அந்த டிப்பர் லாரி நேற்று(31-08-2024) நள்ளிரவு 2 மணி அளவில் திருச்சி – குடமுருட்டி பாலம் மதிமுக அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அதே பாலத்தின் வழியாக திருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவரது காரை தினேஷ் ஓட்டிச் சென்றார்.
அப்போது அந்த டிப்பர் லாரி, காரின் மீது மோதியது. இதில், காரில் இருந்த சிலம்பரசன், தினேஷ் மற்றும் அவரது நண்பர் ஆகிய மூவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கார் சேதமடைந்ததற்கு இழப்பீடு கேட்டு மூன்று பேரும் அறிவழகனிடம் முறையிட்டனர் அதற்கு அவர், லாரி ஓனரிடம் கூறி பரஸ்பரம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அதன்பேரில் சிலம்பரசன், அறிவழகனிடமிருந்து லாரி சாவியை வாங்கி வைத்துக்கொண்டார்.
இந்தநிலையில் அறிவழகன் இன்று கள்ள சாவி மூலம் லாரியை கரூர் நோக்கி ஓட்டி சென்றார். இது குறித்து தகவல் அறிந்த சிலம்பரசன் இருசக்கர வாகனத்தில்
சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று முத்தரசநல்லூர் முருங்கப்பேட்டை அருகே லாரியை மடக்கி பிடித்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஜீயபுரம்
டிஎஸ்பி பாலச்சந்தர் விசாரணை நடத்தினார். விபத்து நடந்த பகுதி கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால் கோட்டை போலீசார் அந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். இதுதொடர்பாக இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த டிப்பர் லாரியில் மணல் கடத்தப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Comments are closed.