தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படும். அதன்படி, 7 முதல் 10 நாட்கள் வரை தொடர் விடுமுறை கிடைக்கும். இதனால் சென்னையில் வசிப்பவர்கள், தொழில் செய்பவர்கள் என பலரும் தங்களுடைய குடும்பங்களுடன் சொந்த ஊர் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல திட்டமிடுவார்கள். இதுபோன்ற விடுமுறை தினங்களை கொண்டாட சொந்த ஊர் செல்வோர் முதலாவதாக ரெயிலை தேர்வு செய்து பயணம் செய்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. அதன்படி, அரையாண்டு விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் வசதிக்காக (டிசம்பர் 22-ந்தேதி) ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாகவும், ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் முன்பதிவு நடைபெற்றது. முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் தென்மாவட்டம் செல்லும் கன்னியாகுமரி, அனந்தபுரி போன்ற ரெயில்களில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. பொதிகை, முத்துநகர், கொல்லம், குருவாயூர், செந்தூர் போன்ற தென்மாவட்ட ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதேபோல டிசம்பர் 24-ந்தேதி சொந்த ஊர் செல்பவர்கள் இன்றும் (சனிக்கிழமை), டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று சொந்த ஊர் செல்பவர்கள் நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) முன்பதிவு செய்யலாம். முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும் என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.