திருச்சி, உறையூரில் ஒரு சிறுமி, மூதாட்டி உட்பட 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு- குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததா?
திருச்சி, உறையூர், மின்னப்பன் தெருவில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த லதா ( வயது 60) மருதாம்பாள் ( 85) மற்றும் பிரியங்கா ( 4) ஆகிய 3 பேர் அடுத்தடுத்து இறந்துள்ளனர். அவர்களின் இறப்புக்கு குடிநீரில் சாக்கடை நீர் கலந்தது தான் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சென்று இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அதேபோன்று அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதனும் ஆறுதல் கூறினார்.சாக்கடை கலந்த குடிநீரை அருந்திய 11 பெண்கள் 8 குழந்தைகள் என 19 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோன்று 10க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்த மருதாம்பாள் கடந்த 20 நாட்களாக உடல்நிலை குன்றிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். மற்ற இருவர் இறப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே தெருவில் அடுத்தடுத்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மின்னப்பன் தெருவில் மாநகராட்சி சார்பில் லாரி மூலம் தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

Comments are closed.