பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்க நினைப்பவர்கள் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள்…- திருச்சியில் திருமாவளவன் குற்றச்சாட்டு… !
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பா.ஜ.க பாசிச அரசு பெரும்பான்மை பலத்தை கொண்டு வக்பு மசோதாவை நிறைவேற்றி உள்ளது. வேறு எந்த மத சொத்து விவகாரங்களிலும் தலையிடாத பா.ஜ.க அரசு, சட்டத்தின் பெயரால் ஜனநாயகத்தின் பெயரால்
அடாவடியை அரங்கேற்றி வருகிறது. வெளிப்படைத் தன்மை என்கிற பெயரில் இஸ்லாமியர் அல்லாதோரை வக்பு வாரியங்களில் நியமிக்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். சிறுபான்மை மதங்களை சேர்ந்தவர்கள் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்க முடியாத சூழலை பா.ஜ.க. உருவாக்கி வருகிறது. வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து ஏப்ரல் 8 ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வி.சி.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர உள்ளோம். வக்பு சட்டத்தை எதிர்த்து மாநிலங்களவையில் அதிமுக வாக்களித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. அரசியல் காரணங்களுக்காக கூட்டணிக் கட்சிகள் பா.ஜ.க வை ஆதரிப்பது வேதனைக்குரியது. அவர்களோடு கூட்டணி வைக்க நினைப்பவர்கள் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்கிற தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
“நீட்” மசோதாவை குடியரசுத்தலைவர் நிராகரித்திருப்பது வேதனை அளிக்கிறது. இந்த சூழலில் 9 ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்டியுள்ளார். அவர் எடுக்கும் முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிப்போம். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் நீட் தேர்வை எதிர்க்க முன் வர வேண்டும். இதில் அரசியலை கடந்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நீட் மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் அதை குடியரசு தலைவர் நிராகரிக்கிறார் என்றால் விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் மத்திய அரசு தான். ஆனால் எதிர்க்கட்சிகள் தமிழக ஆட்சியாளர்களை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது. இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது. மரத்தடி வகுப்புகள் இல்லாத அளவிற்கு வகுப்பறைகளை அதிகரிக்க வேண்டும். நிதிஷ்குமார் கட்சி மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்ததால் அவருடைய கட்சியில் இருந்து இரண்டு எம்பிக்கள் விலகி அவரை கண்டித்துள்ளார்கள். இது கூட்டணி கட்சிகளுக்கு ஒரு சவுக்கடியாகவே உள்ளது. வக்பு மசோதா வாக்கெடுப்பில் அன்புமணி ஏன் பங்கேற்கவில்லை என அவரிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.