திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவதற்கு திமுக அரசு அனுமதி மறுத்து வருகிறது. தமிழக அரசின் இந்த செயலைக் கண்டித்து திருப்பரங்குன்றத்தில் பாஜ, ஹிந்து முன்னணி அமைப்பு உள்பட பல்வேறு ஹிந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனிடையே, தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாதது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.இந்த நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பா விவாதிக்கக் கோரி திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர். மற்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும் என்ற திமுக எம்பிக்களின் கோரிக்கையை ஏற்க லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மறுத்தார். இதனால், அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது இதையடுத்து லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது. இதேபோல, திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக திமுக எம்பிக்கள் கொடுத்த ஒத்திவைப்பு நோட்டீஸை ராஜ்ய சபா சபாநாயகரான துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நிராகரித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்ட திமுக எம்பிக்கள், அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

Comments are closed.