ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று காங்கிரஸார் ரயில் மறியல் போராட்டம் மேற்கொண்டனர். இதில் பங்கேற்ற திருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஒருவர் ரூ.50 ஆயிரம் கோடி, இன்னொருவர் ரூ.5000 கோடி சொத்து சேர்த்துள்ளதாக பொத்தாம் பொதுவாக புழுதி வாரி தூற்றி இருக்கிறார். இது மாதிரி யார் வேண்டுமானாலும் குற்றம் சுமத்த முடியும். இதற்கு வழக்கு தொடர போவதாக தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி அறிவித்துள்ளார். ஆகவே சட்டரீதியாக தி.மு.க. அமைச்சர்கள், நிர்வாகிகள் அதை பார்த்துக் கொள்வார்கள். காங்கிரசை பொருத்தமட்டில் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் சொல்லி அதனை நிரூபிக்க வேண்டும். ஒருவர் குற்றம் சொல்வதால் அதை உண்மை என்று ஏற்றுக் கொள்ள முடியாது. சுப்ரீம் கோர்ட் வரை சென்று தீர்ப்பு வந்தால் தான் குற்றவாளி என்று சொல்ல முடியும். சமீபத்தில் பாஜகவை சேர்ந்த ஒரு அமைச்சருக்கு சிட்பண்ட் பிரச்சனையில் ரூ.2000 கோடி, ரூ.3000 கோடியில் சம்பந்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு அண்ணாமலை பதிலளிக்க வேண்டும் என்றார்.
