விவசாயிகளிடம் நெல் மூட்டைக்கு ரூ.40 கமிஷன் அடித்து கொள்ளை லாபம் பார்க்கிறார்கள்- * திருவாரூர் பரப்புரையில் விஜய் குற்றச்சாட்டு!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். இன்று(20-09-2025) இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் மேற்கொண்டார். இன்று பிற்பகல் தொண்டர்கள் புடை சூழ நாகையில் விஜய் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர் போலவே நாகப்பட்டினத்திலும் ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் புறப்பட்டுச் சென்றார். திருவாரூக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், கிரேன் மூலம் விஜய்க்கு பிரம்மாண்ட மாலை அணிவித்தனர். தொண்டர்கள் அளித்த மாலை மரியாதையை விஜய் ஏற்றுக்கொண்டார். பின்னர் திருவாரூர் கமலாலய குளக்கரையில் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசுகையில்,
திருவாரூர் என்றாலே ஞாபகத்திற்கு வருவது தியாகராஜர் கோவில் தான். நாகை மாவட்டத்தை போலவே திருவாரூர் மாவட்டத்திலும் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. திருவாரூர் பேருந்து நிலையத்திற்கு செல்ல கூட சாலை வசதி இல்லை. இங்குள்ள மருத்துவமனையில் மருத்துவ கருவிகள் இல்லை. மருத்துவ கல்லூரிக்கு வைத்தியம் பார்க்க வேண்டிய நிலை தான் உள்ளது. இந்த மாவட்டத்தில் ஒரு மந்திரி இருக்கிறார். அவர் மக்களுக்கு சேவை செய்வதற்காக இல்லை.முழுக்க முழுக்க முதல்வர் குடும்பத்திற்கு சேவை செய்து வருகிறார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் மூலம் அவர்களது குடும்பம் தான் பயன் பெறுகிறது. மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. திருவாரூர் மாவட்டம் விவசாயம் சார்ந்த பூமி. இங்கு விவசாயிகளால் விளைவிக்கப்படும் நெல்லுக்கு ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன் வாங்குகிறார்கள். ஒரு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் கமிஷன். அப்படி பார்த்தால் இந்த ஆட்சி காலத்தில் விவசாயிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் கமிஷன் பெற்று கொள்ளையடித்து இருக்கிறார்கள். இதனை வேறு யார் சொல்லி இருந்தாலும் நம்பி இருக்க மாட்டேன், விவசாயிகளே என்னிடம் சொன்னார்கள் அதனால் தான் சொல்கிறேன். தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு தேவையான சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார். வழக்கமாக தனது கட்சி சால்வை அணியும் விஜய் திருவாரூர் பரப்புரையில் பச்சை துண்டு அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.