கடவுள் முன் எந்த பாகுபாடும் இருக்க கூடாது: கோவில் திருவிழாக்களை எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது- சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு…!
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த ஜமீன் இளம்பிள்ளை என்னும் பகுதியில் உள்ள மகாமாரியம்மன் கோவில் மாசி திருவிழாவினை நடத்தக் கோரி பாரத் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குறிப்பிட்ட சாதியினர், தங்கள் தலைமையில் தான் திருவிழா நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருவதால், அறநிலையத்துறை தரப்பில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இந்த பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படாததால் அறநிலையத்துறையே விழாவை நடத்தும் என முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.மேலும் ஆண்டுதோறும் அமைதிப் பேச்சு நடத்தப்பட்டு திருவிழா நடத்தப்படுவதாகவும் கூறப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாதி என்பது மதமல்ல என ஏற்கனவே ஐகோர்ட்டு தெரிவித்ததைச் சுட்டிக்காட்டி, திருவிழாவில் பங்கேற்க ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிமை உள்ளது என்றும், அதை மற்ற பிரிவினர் தடுக்க கூடாது என்றும் கூறினார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் அமைதிப் பேச்சு நடத்தவேண்டிய அவசியமில்லை, அறநிலையத் துறை அதிகாரிகள் திருவிழாவை நடத்த வேண்டும். கடவுள் முன் எந்த பாகுபாடும் இருக்க கூடாது. எந்த பிரிவினருக்கும் முன்னுரிமை வழங்காமல் திருவிழாவை நடத்த வேண்டும். தங்கள் தலைமையில் தான் திருவிழா நடத்தப்பட வேண்டும் என எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது என்று தெரிவித்த நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
Comments are closed.